உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாம் மேற்கொண்டுள்ள சமூக ஆர்வலர் தூத்துக்குடி வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் ஆகியோர் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தனர்.
திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவசுப்பிரமணியன் ரத்த தானம், கண் தானம், உடல் தானம், ஸ்டெம் செல் தானம் ஆகியவற்றை வலியுறுத்தி திருப்பூரில் இருந்து புறப்பட்டு தமிழகம் முழுவதும் தனது இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடிக்கு வந்த அவருக்கு தூத்துக்குடி ஆல் கேன் டிரஸ்ட், முத்துக்கண்கள் மற்றும் விளைவுப்பூக்கள் போன்ற சமூக சேவை அமைப்புகள் சார்பில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் ஆகியோர் சமூக ஆர்வலர் சிவசுப்பிரமணியனை பாராட்டினர்.
இதையடுத்து, விழிப்புணர்வு பிரசாரத்தை காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள், அரசு அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.