தூத்துக்குடியில் மனைவியை அடித்துக் கொன்றதாக லாரி ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியமுத்து (59). லாரி ஓட்டுநர். இவரது மனைவி அன்னிபெசன்ட்(55). இத்தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பாக்கியமுத்து, கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். மேலும், அடிக்கடி மது அருந்திவந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவில் மது அருந்தி வீட்டுக்கு வந்த பாக்கியமுத்து, தனது மனைவியிடம் தகராறு செய்தாராம். அப்போது, உருட்டு கட்டையால் அன்னிபெசன்டை பாக்கியமுத்து தாக்கினாராம். இதில், தலையில் பலத்த காயமடைந்த அன்னிபெசன்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த தாளமுத்துநகர் போலீஸார் அன்னிபெசன்ட் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீஸார் வழக்குப் பதிந்து பாக்கியமுத்துவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.