எட்டயபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
எட்டயபுரம், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெப்பம் அதிகளவில் இருந்தது. நண்பகலில் அனல் காற்றும் வீசியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். கடும் வெப்பம் நிலவியதால் நிலத்தடி நீர் ஆதாரம் வெகுவாக குறைந்து குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் பாதிக்கப் பட்டனர். இந்நிலையில் எட்டயபுரம், கீழ
ஈரால் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.மழையால் எட்டயபுரம் - கோவில்பட்டி, எட்டயபுரம் - தூத்துக்குடி பிரதான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.