தூத்துக்குடி

புளியம்பட்டி அருகே மனுநீதி நாள் முகாம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

12th Jul 2019 07:33 AM

ADVERTISEMENT

புளியம்பட்டி அருகே பூவானி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 100 பயனாளிகளுக்கு ரூ. 32.07 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
ஸ்ரீவைகுண்டம் வட்டம் பூவானி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில்  மாவட்ட ஆட்சியர், பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று    அதனை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடன் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். 
அப்போது அவர் பேசியது:   இந்த மனுநீதி நாள் முகாம் நடைபெறுவதையொட்டி  நடைபெற்ற முன்னோடி மனுநீதி நாள் முகாமில், இப்பகுதியில் இருந்து  82 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 34 மனுக்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.  மீதமுள்ள 48 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
முகாமில், வருவாய்த்துறை மூலம் 64 பயனாளிகளுக்கு 
ரூ. 16.62 லட்சம் மதிப்பிலும்,  சுகாதாரத் துறையின் மூலம் 3 கர்ப்பிணிகளுக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான அம்மா ஊட்டச்சத்து பெட்டகம், வேளாண்துறை மூலம் 3 நபர்களுக்கு ரூ. 59 ஆயிரத்து 881 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஒரு பயனாளிக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான தையல் எந்திரம், கலால் ஆணையம் மூலம் 25 நபர்களுக்கு மறுவாழ்வு நிதியாக ரூ. 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலை என மொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ.32.07 லட்சம் மதிப்பிலான  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 
குடிமராமத்து திட்டத்தின்கீழ்  நிகழாண்டு 37 குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 சிறு குளங்கள் டி.வி.எஸ். நிறுவனம் மூலமும்.  மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஊருக்கு நூறு கை திட்டத்தின்கீழ் குளங்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீரை சேமித்தால் நிலத்தடி நீர் அதிகரிக்கும். இளைஞர்கள் சுயதொழில் செய்ய மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் உதவிகள் வழங்கி வருகிறது. 
இம்  மாவட்டத்தில் 1.30 லட்சம் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும்.  வீட்டில்  கழிப்பறை இ;ல்லாத நபர்கள் மனு அளித்தால் கழிப்பறை உடனடியாக கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அரசு  செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் முழுமையாக தெரிந்துகொண்டு பயன்பெற வேண்டும்  என்றார் அவர்.
முகாமையொட்டி,   ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், வேளாண் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள் மூலமாக வைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை ஆட்சியர் பார்வையிட்டார். 
முகாமில்,  தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், வேளாண் இணை இயக்குநர் மகாதேவன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் (பொ) சுகுமார், சுகாதார பணிகள்(தூத்துக்குடி) துணை இயக்குநர் கீதாராணி,  தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சரஸ்வதி, துணை ஆட்சியர் (பயிற்சி) சுப்புலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கவிதா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உமாசங்கர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், வட்டாட்சியர் சந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT