தூத்துக்குடி

திருச்செந்தூர் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம்

12th Jul 2019 07:04 AM

ADVERTISEMENT

திருச்செந்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மெய்யூர் பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடன்குடி - திசையன்விளை சாலையில் மெய்யூர் உள்ளது. இந்த ஊரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஊருக்கு வெளியே மெய்யூர் என்பதை சுப்பிரமணியபுரம் மெய்யூர் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டதாம். இதற்கு மெய்யூர் பகுதியில் வசிக்கும் சிலர்  எதிர்ப்பு தெரிவித்தனர்.   இது குறித்து திருச்செந்தூர் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அப்போது அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் மீண்டும் மெய்யூர் என பெயர் பலகை வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனராம். ஆனாலும்  மெய்யூர் என பெயர் பலகை வைக்கபடவில்லையாம்.
  இந்நிலையில்,  உடனடியாக மீண்டும் பழையபடி மெய்யூர் என பெயர் பலகை வைக்க வேண்டும் என வலியுறுத்தி  அதே ஊரைச் சேர்ந்த செல்வன் தலைமையில்  திரளானோர் திருச்செந்தூர் நெடுஞ்சாலை அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு   உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் இல்லாததால்,  மெய்யூர் கிராம மக்கள்  மாலை  வரை அங்கேயே காத்திருந்தனர். 
  தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் பிரேம்சந்தர், அலுவலகத்தில் காத்திருந்தவர்களிடம் செல்லிடப்பேசியில்  பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்,  ஊருக்கு வந்து நேரில் வந்து நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியதை தொடர்ந்து,   போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT