தூத்துக்குடி

"கோவில்பட்டியில் நவீன ஆவின் பார்லர் விரைவில் அமைக்கப்படும்'

4th Jul 2019 06:28 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் நவீன ஆவின் பார்லர் (ஹைடெக் ஆவின் பார்லர்) விரைவில் அமைக்கப்படவுள்ளதாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சின்னத்துரை தெரிவித்தார்.
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையிலுள்ள கோவில்பட்டி பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தை அவர் புதன்கிழமை பார்வையிட்டு, கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனையாகும் பாலின் அளவைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, கூட்டுறவு சங்க வளாகத்தில் "ஹைடெக் ஆவின் பார்லர்' அமைப்பதற்கான இடத்தையும், தொழிற்பேட்டையிலுள்ள ஆவின் பால் குளிரூட்டு நிலையத்தையும் பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையிலுள்ள பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க வளாகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா, வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றுடன் கூடிய "ஹைடெக் ஆவின் பார்லர்' அமைக்கப்படும். அதற்கான அடிக்கல் நாட்டு விழா அமைச்சர்கள் தலைமையில் விரைவில் நடைபெறும். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமையவுள்ள பார்லரில்,  நெய், பால்கோவா, பல்வேறு ஐஸ் வகைகள், தனியார் பாலைவிடக் குறைந்த விலையில் தரமான ஆவின் பால் கிடைக்கும். 
ஆவின் பாலகங்களில் ஆவின் பொருள்களைத் தவிர, மற்ற பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்பட்டி பகுதியில் ஏஜென்ட்டுகள் மூலம் 3 ஆயிரம் லிட்டர் பால் விற்பனையாகிறது. இதை 5 ஆயிரம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையிலும், நகராட்சி அலுவலகம் அருகிலும் ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும் என்றார் அவர். 
திருநெல்வேலி ஆவின் பொதுமேலாளர் ரெங்கநாதஸ்ரீ, மேலாளர்கள் திவான், ராஜேந்திரன் (சிவில்), ஆவின் நிறுவன இயக்குநர்கள் நீலகண்டன், அக்ரி எஸ். மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT