திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் மூலம் பிரசாதப் பொருள்களை நேரடியாக விற்பனை செய்யும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.
இக்கோயிலில் சுமார் 30 ஆண்டுகளாக பிரசாதப் பொருள்கள் விற்பனை உரிமம் ஏலம்விடப்பட்டு, தனியார் குத்தகைதாரர் மூலம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தரமானதாகவும், குறைந்த விலையிலும் பிரசாதங்கள் வழங்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், திருக்கோயில் நிர்வாகமே பக்தர்களுக்கு நேரடியாக பிரசாதப் பொருள்கள் விற்பனை செய்யும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
திருச்கோயில் வளாகத்தில் உள்ள புறக்காவல்நிலையம் அருகில் பிரசாதம் விற்பனை மையத்தில் திருக்கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை விற்பனையை தொடங்கிவைத்து, சுமார் 500 பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கினார்.நிகழ்ச்சியில், உதவி ஆணையர் வே.செல்வராஜ், தக்கார் பிரதிநிதி சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், கண்காணிப்பாளர்கள் வெள்ளச்சாமி, ராஜ்மோகன், மாரிமுத்து, திருக்கோயில் வேதபாடசாலை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.