கோவில்பட்டியில் தனியார் விடுதியில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டி தனியார் விடுதியில் தங்கியிருந்த காமராஜ் நகரைச் சேர்ந்த ரத்தினம் மகன் சொக்கலிங்கம்(45) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர், பல பேரிடம் குறைந்த வட்டிக்கு பணத்தை வாங்கி, அதை பிறருக்கு அதிக வட்டிக்கு கொடுத்து வந்தவர் என்பது தெரியவந்ததாம். மேலும், இவருக்கு பணம் கொடுத்த கடலைக்காரத் தெருவைச் சேர்ந்த தங்ககோவிந்தன் மகன் அற்புதராஜ்(31), இளையரசனேந்தல் சாலையைச் சேர்ந்த மதிமோகன் மகன் கார்த்திகேயன்(29) மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும், சொக்கலிங்கத்தை சனிக்கிழமை காலை தனியார் விடுதியில் வைத்து பணம் கேட்டு மிரட்டியதும், அதையடுத்து, சொக்கலிங்கம் அறையில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தொங்கியதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, சொக்கலிங்கத்தை தற்கொலைக்கு தூண்டியதாக அற்புதராஜ் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.