தூத்துக்குடி

ஆட்சியரகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த 2 மூதாட்டிகள்!

2nd Jul 2019 09:50 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மண்ணெண்ணெய் கேனுடன் வந்த 2 மூதாட்டிகளால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, ஸ்ரீவைகுண்டம் உச்சிமகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த காசி ஈசுவரம் (72), அவரது சகோதரி சண்முகவடிவு (65) ஆகியோர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், மூதாட்டிகள் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். பிறகு, அவர்கள் இருவரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், சண்முகவடிவின் கணவர் கிருஷ்ணன், கிருஷ்ணம்மாள் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதால், முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், இன்று வரை அவர் எந்த பணமும் கொடுக்கவில்லை. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நூதனப் போராட்டம்: தூத்துக்குடி டூவிபுரம் 7 ஆவது தெருவைச் சேர்ந்த வழக்குரைஞர் சுப்பிரமணி, ஒரு காருடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தார். 
அங்கு போக்குவரத்து காவலர் போல உடை அணிந்த அவர், தனது கார் ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்பது போல நடித்து, பணம் பெற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். போக்குவரத்து போலீஸார் மக்களிடம் லஞ்சம் வாங்குவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குரைஞர் தெரிவித்தார். 
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், வழக்குரைஞரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சிறிது நேரத்தில் விடுவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT