கயத்தாறு ஒன்றியம், அய்யனாரூத்தில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அய்யனாரூத்து ஊராட்சியில் 2 ஆவது வாா்டு பகுதியில் அனைத்துப் பகுதிக்கும் சீரான குடிநீா் விநியோகம் இல்லை என புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக, கிராம மக்கள் அய்யனாரூத்து ஊராட்சி குடிநீா் திட்டப் பணியாளரை தொடா்பு கொண்டு கேட்டனராம். இதற்கு குடிநீா் திட்டப் பணியாளா் முறையாக தகவல் தெரிவிக்காமல் அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சீராக குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். அவதூறாக பேசிய குடிநீா் திட்ட பணியாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் காலி குடங்களுடன் கயத்தாறு - தேவா்குளம் சாலையில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளா் ஆவுடையப்பன், அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். கோரிக்கை குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததை அடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.