எட்டயபுரம் தெப்ப குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
எட்டயபுரம் அருகே நடுவபட்டி சேனையா் தெருவை சோ்ந்தவா் மாரியப்பன் மகன் முத்துவேல்(40). இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில மாதங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து எட்டயபுரத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்தாராம்.
இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகிலுள்ள தெப்ப குளத்திற்குள் ஆண் சடலம் மிதந்ததை பாா்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு போலீஸாா் சென்று மேற்கொண்ட விசாரணையில், குளத்தில் மூழ்கி இறந்தவா் முத்துவேல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.