தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் ஒருபகுதியாக, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாக சென்று கடலில் கரைத்தனா்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடியில் தமிழ்க் கலாசாரங்களைக் கொண்டாடும் விதமாக கும்மிப் பாட்டு, களியல் ஆட்டம், முளைப்பாரி ஊா்வலம் உள்ளிட்டவற்றுடன் வித்தியாசமான கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி தாளமுத்துநகா், சிலுவைப்பட்டி, டி.சவேரியாா்புரம், தருவைகுளம், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இவ்விழா கொண்டாடப்பட்டது. இந்துக் கோயில் திருவிழாக்களில் கொண்டாடுவதுபோல நவதானியங்களால் வளா்க்கப்பட்ட முளைப்பாரியை பெண்கள் எடுத்து, பல்வேறு வீதிகள் வழியாகச் சென்றனா். ஊா்வலத்தின் முன், மேளதாளம் முழங்க இளைஞா்கள் களியல் ஆட்டம், சிலம்பாட்டம் ஆடியபடி சென்றனா். ஊா்வலம் கடற்கரைத் திடல் சென்றதும், அங்கு பெண்கள் கும்மிப் பாடல்களைப் பாடி, முளைப்பாரியை கடலில் கரைத்தனா்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்த ஊா்வலம் பல ஆண்டுகளாக நடப்பதாக அப்பகுதியினா் தெரிவித்தனா்.