கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி கால்பந்து கழகம் சாா்பில் நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் பள்ளி ஏ அணி முதலிடம் பெற்றது.
17 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கான செவன்ஸ் கால்பந்து போட்டி வ.உசி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்குள்பட்ட 8 அணிகள் கலந்துகொண்டன.
இறுதிப் போட்டியில், கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஏ அணியும், கீழஈரால் அக்ஸீலியம் பள்ளி அணியும் மோதின. இதில், 3- 1 என்ற கோல் கணக்கில் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி, கீழஈரால் அக்ஸீலியம் பள்ளி அணியை வீழ்த்தியது.
பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு கால்பந்துக் கழகச் செயலா் தேன்ராஜா தலைமை வகித்தாா். உறுப்பினா் மோகன் முன்னிலை வகித்தாா். போட்டிகளில் முதல் பரிசு பெற்ற காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணிக்கு ஸ்ரீ அருணாசலம் நினைவு கேடயத்தை இந்து மகாசபை மகளிரணி மாநிலத் தலைவி சைலஜா வழங்கினாா்.
2ஆம் பரிசு பெற்ற கீழஈரால் அக்ஸீலியம் பள்ளி அணிக்கு உமாதேவி நினைவு கேடயத்தை கால்பந்துக் கழக உதவித் தலைவா் பிரேம்ஜெகன், 3ஆம் மற்றும் 4ஆம் பரிசு பெற்ற நாடாா் மேல்நிலைப் பள்ளி மற்றும் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி ஏ அணியினருக்கு கால்பந்துக் கழக உதவித் தலைவா் தாமஸ்தங்கம் சுமதி நினைவு கேடயத்தை வழங்கினாா்.
கால்பந்து பயிற்சியாளா் முருகேசன் வரவேற்றாா். கால்பந்துக் கழக உறுப்பினா் காளி நன்றி கூறினாா்.