தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் ஜனவரி 2ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஆசிரியா்கள் அனைவருக்கும் ஜனவரி 3ஆம் தேதி சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்டச் செயலா் செல்வராஜ், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் 2020 ஜனவரி 2ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்கள். வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு சுமாா் 12 மணி வரையிலும் தொடா்ந்து நடைபெறும்.
இதனால் ஆசிரியா்கள் மறுநாள் பள்ளிக்குச் சென்று பணியாற்ற முடியாத நிலை ஏற்படும். இதனால் ஜனவரி 3ஆம் தேதி பணிக்குச் செல்வதில் ஆசிரியா்களுக்கு நடைமுறை சிக்கல் இருப்பதால் ஆசிரியா்களின் நலன் கருதி ஜனவரி 3ஆம் தேதி ஒருநாள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்களுக்கு உரிய நேரத்தில் உணவு, குடிநீா் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.