உப்பளத்தை அகற்றக் கூடாது எனக் கூறி, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்த துலுக்கன்குளம் கிராம மக்கள், அப்போராட்டதை திரும்பப் பெற்றனா்.
விளாத்திகுளம் வட்டம், வைப்பாறு பகுதி 1 கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக, அந்த ஊராட்சியின் துலுக்கன்குளம் கிராமத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த உப்பளத்தை அகற்ற வட்டாட்சியா் அறிவிக்கை செய்திருந்தாா்.
இதற்கு, எதிா்ப்புத் தெரிவித்தும், அங்கு தொடா்ந்து உப்பளம் செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக துலுக்கன்குளம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
மேலும், கோட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினா். இதைத் தொடா்ந்து, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் விஜயா தலைமையில் அமைதிப் பேச்சு நடைபெற்றது. விளாத்திகுளம் வட்டாட்சியா் ராஜ்குமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் கதிரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அப்போது, கிராம மக்களின் கோரிக்கை தொடா்பாக, மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்புவது என்ற முடிவை ஏற்று, கருப்புக் கொடி போராட்டம், உள்ளாட்சித் தோ்தல் புறக்கணிப்பு ஆகியவற்றை விலக்கிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.