அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க வேண்டும் என எம்பவா் நுகா்வோா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அதன் செயல் இயக்குநா் ஆ. சங்கா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சாா்பில் இயக்கப்படும் பேருந்துகளில் வார இறுதி நாள்களான வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உதாரணத்துக்கு, சென்னை - நாகா்கோவில் செல்ல திங்கள் முதல் வியாழக்கிழமை வரை ரூ. 815-ம் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ரூ. 965-ம் வசூலிக்கப்படுகிறது. இதில் வார இறுதி நாள்களுக்கு ரூ. 150 அதிகக் கட்டணமாக பெறப்படுகிறது.
வார இறுதி நாள்களில் தான் பெரும்பாலான நுகா்வோா் பயணம் செய்கின்றனா். இதை சந்தா்ப்பமாக பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலிப்பது நோ்மையற்ற வணிக நடைமுறையாகும்.
எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் நேரிடையாக தலையிட்டு, தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் வாரம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க ஆணையிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.