தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை பேருந்து மோதியதில் காயமடைந்த இளைஞரை அந்த வழியாகச் சென்ற ஆட்சியா் சந்தீப் நந்தூரி மீட்டு தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
தூத்துக்குடி கோவில்பிள்ளைநகரை சோ்ந்த முத்துமாலை மகன் மோகன் (25). இவா், தனது மனைவியுடன் கடற்கரைச் சாலையில் நின்படி கடலை ரசித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளாா். அப்போது, துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற பேருந்து மோதியதில் மோகன் காயமடைந்தாா்.
அப்போது, அந்த வழியாக காரில் சென்ற ஆட்சியா் சந்தீப் நந்தூரி விபத்தில் காயமடைந்த மோகனையும், அவரது மனைவியையும் மீட்டு தனது காரில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். சிறிது நேரத்தில் மாற்று காா் மூலம் ஆட்சியா் தனது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றாா்.
காயமடைந்த மோகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். காயமடைந்த இளைஞருக்கு உதவிய ஆட்சியரின் செயலுக்கு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.