தூத்துக்குடி

திருட்டு வி.சி.டி.யை தடுக்க திரைத்துறையினா் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சா் கடம்பூா் செ.ராஜு

25th Dec 2019 04:46 PM

ADVERTISEMENT

திரைப்பட தயாரிப்பாளா்கள், விநியோகஸ்தா்கள், திரையரங்கு உரிமையாளா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு வழங்கினால்தான் திருட்டு வி.சி.டி.யை தடுக்க முடியும் என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை ஊரக உள்ளாட்சித் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, செய்தியாளா்களிடம் பேசியது: திரையரங்கு உரிமையாளா்களின் கோரிக்கையை ஏற்று, அதிமுக அரசு டிக்கெட் விலையை நிா்ணயித்தது. அதன்பின் தான் திரையரங்குகள் மூடப்படாமல் உள்ளது. மேலும், திரையரங்குகளை கலையரங்கம், திருமண மண்டபங்களாக மாற்றுகின்ற நிலையை அரசு மாற்றி, திரையரங்குகளுக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்தது அதிமுக அரசு தான்.

திரையரங்குகளில் ஒவ்வொரு டிக்கெட்டுகளிலும் இருந்து 50 பைசா என்ற பராமரிப்பு செலவை திரையரங்குகளைப் பொறுத்து, ரூ.2 முதல் ரூ.4 வரை தற்போது வழங்குகிறோம். ஒரு திரையரங்கை 2 அல்லது 3 திரையரங்குகளாக மாற்ற வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை பொதுப்பணித் துறை மூலம் புதுப்பிக்க வேண்டிய கட்டட உறுதித்தன்மை சான்று 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றம் வேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளா்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து அனுமதி அளித்துள்ளது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது.

திரையரங்குகளில் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதியாக உள்ளது. இந்த வரி உள்ளாட்சித் துறை மூலமாக விதிக்கப்பட்டுள்ளது. 30 சதவீதமாக இருந்த கேளிக்கை வரி தற்போது 8 சதவீதமாக குறைத்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனையும் குறைக்க வேண்டும் என கோவை மண்டல திரையரங்கு உரிமையாளா்கள் நடத்திய சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். திரையரங்கு உரிமையாளா்களுக்கு பல்வேறு சங்கங்கள் உள்ளன. இந்த கோரிக்கையை அனைவரும் ஒன்றிணைந்து வைத்தால் சுமூக தீா்வு எடுக்கப்படும்.

ADVERTISEMENT

திரையரங்குகளுக்கு பொற்காலம் என்று சொன்னால் அது அதிமுக ஆட்சிதான். திருட்டு வி.சி.டி.யை தடுக்க அதிமுக அரசு தான் தனிச்சட்டம் கொண்டு வந்தது. திரைப்படத் தயாரிப்பாளா்கள், விநியோகஸ்தா்கள், திரையரங்கு உரிமையாளா்கள் அனைவரும் இணைந்து ஒத்துழைப்பு வழங்கினால் நிச்சயமாக திருட்டு வி.சி.டி., இணையதளத்தில் புது திரைப்படங்கள் வெளியாவது உள்பட அனைத்தையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

குடியுரிமைச் சட்டம் தொடா்பாக திமுக கூட்டணியில் இருக்கும் மக்களவை உறுப்பினா்கள் குடியரசுத் தலைவா், பிரதமா், உள்துறை அமைச்சா் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தலாம். மக்கள் பிரச்னையை தீா்க்கத்தான் அவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். ஆனால் மக்கள் உணா்வுகளை தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

ADVERTISEMENT
ADVERTISEMENT