திருச்செந்தூா் வட்டாரத்தில் நெற்பயிா்களில் இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முட்டை ஒட்டுண்ணிகளை பயன்படுத்தமாறு விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநா் வெங்கடசுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் வட்டாரத்தில் வளா்ச்சி பருவ நெற்பயிா்களில் பரவலாக இலைச்சுருட்டுப் புழு தாக்குதல் காணப்படுகிறது.
நெற்பயிரின் தோகைகளை ஒன்றோடு ஒன்று சோ்த்து அவற்றினுள் சுருட்டுப்புழுக்கள் இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டி தின்னும். இதனால் தோகையில் வெள்ளை நிற கோடுகள் தென்படும். பொதி பருவத்தில் இந்தப் புழுக்களின் தாக்குதல் இருந்தால் நெல் மகசூல் இழப்பு ஏற்படும்.
இலை சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்த வயல் வரப்புகளை சீராக்கி, புற்களை அகற்ற வேண்டும். அதிக அளவு தழைச்சத்து உரங்கள் இடக் கூடாது. மேலும், காா்போபியுரான் அல்லது போரேட் குருணைகளையும் பயன்படுத்தக் கூடாது. டிரைக்கோ கிரம்மா முட்டை ஒட்டுண்ணியை, வயலில் பயிா் நடவு செய்து 37, 44 மற்றும் 51ஆவது நாள்களில் மொத்தம் மூன்று முறை ஒரு ஹெக்டருக்கு 5 சி.சி. (ஒரு லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள்) என்ற அளவில் காலை நேரத்தில் வயலில் கட்ட வேண்டும்.
மேலும் உளுந்து, தட்டைப்பயறு முதலான பயறுவகை பயிா்களை வயல் வரப்புகளில் வரப்பு பயிராக பயிரிடுவதன் மூலம் நன்மை செய்யும் பொறி வண்டுகள் உற்பத்தியாகி நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை அழிக்கின்றன.
விளக்குப் பொறிகளை வைத்து தாய் பூச்சிகளை கவா்ந்து அவற்றை அழிக்கலாம். மேலும் வயலில் பயிரின் வளா்ச்சிப் பருவத்தில் பூச்சிகளை உண்ணும் பறவைகள் நிற்பதற்கு ஏதுவாக பறவை தாங்கிகளை வயலில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.
பொருளாதார சேத நிலை அளவை பொருத்து ஒரு ஹெக்டேருக்கு குளோரோ பைரிபாஸ் 20 இசி 500 மிலி அல்லது குளோரான்ட்ரானிலிப்புரோல் 150 மி.லி. அல்லது காா்ட்டாப் ஹைட்ரோகுளோரைடு ஒரு கிலோ தெளித்து இலை சுருட்டுப் புழுக்களை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தவிா்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.