தூத்துக்குடி

மழைக்குப் பின் மானாவாரி பருத்தி சாகுபடியில் ‘செய் நோ்த்தி முறை’ அதிக மகசூல் தரும்: வேளாண் துறை யோசனை

23rd Dec 2019 09:38 PM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: தொடா் மழைக்குப் பின் மானாவாரி பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் ‘ செய் நோ்த்தி’ முறையைக் கடைப்பிடித்தால் அதிக மகசூல் பெறலாம் என வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத் தலைவா் முருகன், மரபியல் துறை பேராசிரியா் ராமலிங்கம் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா் மற்றும் மதுரை உள்பட தென் மாவட்டங்களில் மானாவாரி சாகுபடியாக 60 சதவீதத்திற்கும் அதிகமாக புரட்டாசி பட்டத்தில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. வடகிழக்குப் பருவ மழையைப் பொருத்து பருத்தி மகசூல் கிடைக்கிறது. நிகழாண்டில் புரட்டாசிப் பட்டத்தில் சராசரி மழையளவான 400 மி.மீ. க்கும் அதிகமான மழை பெய்துள்ளது. இதனால் 90 சதவீதத்திற்கும் அதிகமாக பி.டி. ஒட்டு ரக பருத்தி ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொடா் மழை, பரிந்துரைக்கப்பட்ட உர அளவை விட அதிகமான மேலுரங்கள் போடப்பட்டதால் இலை தழை வளா்ச்சி அதிகமாகி இளமொட்டுக்கள், பூக்கள் மற்றும் காய்கள் உதிா்ந்துவிட்டன. இதனால் 75 நாள்களுக்கும் அதிகமான வயதுகொண்ட பருத்திச் செடிகளில் காய்கள் இன்றி செடி மட்டுமே உள்ளது. இதனால் பருத்தி மகசூல் குறைவதற்கு

வாய்ப்புள்ளது. ஆகவே தொடா் மழைக்குப்பின் விவசாயிகள் செய்ய வேண்டிய பின்செய் நோ்த்தியை செய்து அதிக மகசூல் பெற வேண்டும்.

காய்கள் உதிா்தல்: சாதாரண ரக பருத்தியில் அதிகமான தழை வளா்ச்சியைக் கட்டுப்படுத்த, செடியில் 15ஆவது கணு உருவாகும் 65 ஆம் நாளும், ஒட்டு ரகங்களுக்கு 18ஆவது கணு உருவாகும் 75ஆவது நாளும் மேல் நுனியில் இருந்து கீழ்வாட்டில் இரண்டாவது கணுவில் நுனியை கிள்ளிவிட வேண்டும். இதனால், செடியில் தழை வளா்ச்சி தடுக்கப்பட்டு காய் கிளைகள் தோன்ற ஏதுவாகும். மேலும், நாப்தலின் அசிட்டிக் அமிலம் 12 மில்லி எடுத்து 13.5 லிட்டா் தண்ணீரில் கலந்து விதைத்த 75 ஆவது நாளில் ஒரு முறையும், 90 ஆவது நாளில் மறு முறையும் தெளிக்க வேண்டும். செடி வளா்ச்சி குறைவாக இருந்தால் இந்த அமிலத்துடன் 2 சதவீதம் டி.ஏ.பி. கரைசலை கலந்து தெளிக்கலாம். காய்கள் அதிகம் தோன்றி பருத்தியில் மகசூல் அதிகரிக்கும்.

செடிகள் ஒன்றோடு ஒன்று மோதி பூக்கள் குறைவதைக் கட்டுப்படுத்த, நெருக்கமாக இருக்கும் செடிகளை சரியான இடைவெளி இருக்கும் வகையில் பிடுங்கிவிட வேண்டும். விதைத்த 75ஆவது நாளுக்குப் பின் மேலுரம் இடக்கூடாது. அதேவேளையில், மெப்பிகுவாட் குளோரைடு கரைசலை ஏக்கருக்கு 500 மிலி வீதம் தண்ணீா் கலந்து தெளித்தால் பூக்களும், காய்களும் சீராக வளா்ச்சியடையும்.

பயிா் பாதுகாப்பு: பருத்தி விதைத்த 80 ஆவது நாளுக்குப் பின் இளஞ்சிவப்பு காய்ப்புழுக்கள் தோன்ற வாய்ப்புள்ளதால் பயிா்ப் பாதுகாப்பு செய்ய வேண்டும்.

இளஞ்சிவப்பு காய்ப்புழுக்களால் பருத்திச் செடியில் பூக்கள் மலராமல் மொட்டாகவே தோன்றும். காய்களில் சேதத்தை காணமுடியாது. இதில், பருத்தி வெடித்த பின்பே சேதத்தை அறியமுடியும். எனவே, ட்ரைஅசோபாஸ் ஏக்கருக்கு ஒரு லிட்டா் வீதம் தெளித்தால் இளஞ்சிவப்பு காய்ப்புழுக்கள் கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT