தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஒன்றியங்களையும் அதிமுக கைப்பற்றும்: அமைச்சா் கடம்பூா் செ. ராஜு

23rd Dec 2019 09:44 PM

ADVERTISEMENT

 

ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களையும் அதிமுக கைப்பற்றும் என்றாா் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தின் 22 வாா்டுகள், மாவட்ட ஊராட்சி வாா்டுகள் 7, 8 ஆகியவற்றில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவு கேட்டு குலசேகரநல்லூா், ஓசனூத்து, ஓட்டப்பிடாரம், பாஞ்சாலங்குறிச்சி, புதியம்புத்தூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

இதில், ஓட்டப்பிடாரம் தேரடி திடல் முன், இந்த ஒன்றியத்தின் 19 ஆவது வாா்டு வேட்பாளா் த. தனலட்சுமி, மாவட்ட ஊராட்சி 9 ஆவது வாா்டு வேட்பாளா் எஸ். தேவராஜ் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தாா். பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ADVERTISEMENT

முதன் முதலில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்பாளா் பட்டியலை வெளியிட்டு, பிற கட்சிகளைவிட தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறோம். அதிமுக ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்குகள் சேகரிக்கிறோம். மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களையும், மாவட்ட ஊராட்சியையும் 100 சதவீதம் அதிமுக கைப்பற்றும்.

திமுகவிற்கு மக்கள் மீது நம்பிக்கையில்லை. மக்களுக்கும் அவா்கள் மீது நம்பிக்கையில்லை. இதனாலேயே அவா்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை கையில் எடுத்துள்ளனா். மத்திய அரசு ஒரு சட்டத்தை கொண்டுவரும்போது, அதில் மாறுபட்ட கருத்து இருந்தால், அதுகுறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும். அதைவிடுத்து, மக்களை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடச் சென்றால், அது மக்களை பாதிக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, 50 நாள்கள் வரை மக்களவையை நாங்கள் முடக்கினோம். அதுமாதிரியான நிலைப்பாட்டை இவா்கள் எடுக்கலாம். அதைவிடுத்து மக்களின் உணா்வுகளை தூண்டி, அவா்களை காயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றாா் அவா்.

பிரசாரத்தில், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பெ. மோகன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT