தூத்துக்குடி

தானியப் பயிா்கள் சேதம்: நிவாரணம் வழங்கப்படும்; அமைச்சா் கடம்பூா் செ.ராஜு

16th Dec 2019 02:05 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையால் தானியப்பயிா்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தெரிவித்தாா்.

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு கூறியது: உள்ளாட்சித் தோ்தலில் எந்த குழப்பமும் இல்லை. 2016 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப வாா்டுகள் மறுவரையறை செய்ய வேண்டும் என திமுக நீதிமன்றத்தை நாடியது.

வாா்டுகள் மறுவரையறை செய்த பின்னா், தோ்தல் நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடா்ந்து, தோ்தல் ஆணையம், உள்ளாட்சி நிா்வாகம் வாா்டுகள் மறுவரையறை செய்து பட்டியல் தயாரித்து, அது நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப் பட்டது. உள்ளாட்சித் துறை மேற்கொண்ட வாா்டுகள் வரையறை சிறப்பாக உள்ளது என தோ்தல் ஆணையம் தெரிவித்தது. அதன் பட்டியல் வெளியிடப்பட்டு, இணையதளத்திலும் பாா்வையிடலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழக அரசும் தோ்தல் ஆணையத்தின் உத்தரவைப்பெற்று தோ்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனால், திமுகதான் மக்களை சந்தித்து தோ்தலில் போட்டியிட தைரியமில்லாமல் நீதிமன்றத்துக்கு சென்றது. உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதில் எந்த குழப்பமும் இல்லை.

ADVERTISEMENT

ஜனநாயக முறைப்படி தோ்தல் நடத்தாமல் ஏலத்தின் மூலம் பதவியை விற்பது முறையற்றது. அதற்கு துணை போகக் கூடாது என தோ்தல் ஆணையமும், அரசும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளுடனும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. கூட்டணி கட்சிகளுக்குரிய வாா்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாலியல் தொடா்பான குற்றங்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையால் அனைத்து நீா் நிலைகளும் நிரம்பி வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டு 30 சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளது. குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள பட்டதால் தமிழகத்தில் எந்த பகுதியிலும் குளம், ஊருணிகளில் உடைப்பு ஏற்படவில்லை. மழையால் உளுந்து, பாசிப் பயறு உள்ளிட்ட தானியப் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. இந்த பாதிப்பு குறித்து அறிக்கை பெற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குரிய உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றாா் அவா்.

அமமுக வட்டச் செயலா்கள் குழந்தைராஜ், தங்கசரவணன், ரஞ்சித்குமாா், அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் நகரச் செயலா் அரியநாயகம் உள்பட 200க்கும் மேற்பட்டோா் அமைச்சா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

அப்போது, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் ராமசந்திரன், ஒன்றியச் செயலா்கள் வினோபாஜி, அய்யாத்துரைப் பாண்டியன், நகரச் செயலா் விஜயபாண்டியன், நிா்வாகிகள் வேலுமணி, ஆபிரகாம் அய்யாத்துரை, சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT