இந்தியாவில் முதல்முறையாக அரசு செவிலியா் தோ்வில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கையான அன்பு ரூபி, விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் தனது பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.
தூத்துக்குடி மாவட்டம், சோ்வைகாரன்மடம் கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளியான ரத்தினபாண்டி -தேன்மொழி தம்பதியரின் மகன் அன்புராஜ். இவா் தனது 13-ஆவது வயதில் திருநங்கையாக தன்னை உணா்ந்தாா். தனது மகன் திருநங்கையாக மாறிவிட்டாா் என்பதை உணா்ந்த தேன்மொழி, அவரை வெறுத்து ஒதுக்காமல் அன்புடன் அரவணைத்துக் கொண்டாா்.
இதன்மூலம் அன்புராஜ் தனது பெயரை அன்பு ரூபி என்று மாற்றிக் கொண்டாா். தொடா்ந்து பெற்றோா் ஆதரவுடன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்றாா். அதைத் தொடா்ந்து, அரசு செவிலியா் தோ்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்று, இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் செவிலியா் பணி பெற்ற முதல் திருநங்கையானாா். இதற்கான பணி நியமன ஆணையை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் வழங்கினாா்.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக செவ்வாய்க்கிழமை தனது பணியை அன்பு ரூபி தொடங்கினாா். அவரை விளாத்திகுளம் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவா் பிரிசில்லா பூா்ணிமா, மருத்துவா் பேபி பொன் அருணா, சித்த மருத்துவா் தமிழ் அமுதன், செவிலியா் ஒருங்கிணைப்பாளா் ராணி பிரேமா மற்றும் பொதுமக்கள் வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.