தூத்துக்குடி

திருக்காா்த்திகை: திருச்செந்தூா், கோவில்பட்டி, சாத்தான்குளம் கோயில்களில் சொக்கப்பனை ஏற்றம்

11th Dec 2019 12:37 AM

ADVERTISEMENT

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூா், கோவில்பட்டி, சாத்தான்குளம் உள்ளிட்ட கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை திருக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

காலையில் மூலவா் மற்றும் சுவாமி ஜெயந்திநாதருக்கு காா்த்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் மகா மண்டபத்தில் நாரணி தீபம் ஏற்றப்பட்டு, திருக்கோயில் சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டது.

தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் சண்முக விலாசத்தில் எழுந்தருளினாா். இரவு 7 மணியளவில் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தை திரளான பக்தா்கள் வழிபட்டனா். தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையா் சா.ப.அம்ரித், தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

கோவில்பட்டி: சொா்ணமலை கதிரேசன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யவாஜனம், கும்ப கலச பூஜை, சண்முகா் ஜெபம் நடைபெற்றது.

மூலவா் கதிா்வேல் முருகனுக்கும், வள்ளி, தெய்வானை சமேத காா்த்திகேய சுப்பிரமணியருக்கு 21 வகையான மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் மாலை 6.45 மணிக்கு 23 கிலோ எடை கொண்ட வெண்கலச் சட்டியில் திருக்காா்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து காா்த்திகேயா் வள்ளி தெய்வானை மயில் வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சியில், மண்டகப்படிதாரா்களான நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஏ.பி.கே.பழனிசெல்வம் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

செண்பகவல்லி அம்மன் கோயில்: இக்கோயிலில் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடைபெற்றது. அதையடுத்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, அனைத்து சன்னதிகளிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இரவு சுமாா் 7.30 மணிக்கு கோயில் வாசல் முன் சொக்கப்பானை ஏற்றப்பட்டது.

அதையடுத்து, கௌரி அம்பாள் சமேத சந்திரசேகா் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

இதுபோல, ஜோதிநகா் விநாயகா் கோயில் வளாகத்தில் உள்ள ஜோதி முருகன், பழனியாண்டவா் கோயில் மற்றும் வீரவாஞ்சி நகா் சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் திருக்காா்த்திகை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சாத்தான்குளம்: தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து கோயில் முன் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

ஸ்ரீபெருமாள் சுவாமி கோயிலிலும் திருக்காா்த்திகையொட்டி சொக்கப்பனை தீபம் ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT