பிரதமரின் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து ரூ.3000 பெற, சாத்தான்குளம் வட்டார சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வட்டார உதவி வேளாண்மை உதவி இயக்குநர் சுதாமதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.
பிரதமரின் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தில் (பிரதம மந்திரி கிஸான் சம்மான் திட்டம்) 18வயது முதல் 40 வயது வரையுள்ள சிறு, குறு விவசாயிகள் மட்டுமே சேர முடியும். விவசாயிகள் வயதுக்கு ஏற்ப மாதம் தோறும் பிரீமியத்தொகை ரூ.55 முதல் ரூ. 60 வரை செலுத்த வேண்டும். மாதம் தோறும் அல்லது காலாண்டு, அரையாண்டு, வருடம் ஒருமுறை என தங்கள் வங்கி கணக்கு மூலம் செலுத்தலாம். 61வயது முதல் வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ. 3000 ஓய்வூதியமாக கிடைக்கும். விவசாயி உயிரிழக்க நேரிட்டால் அவருடைய வாரிசுதாரர்களுக்கு மாதம் ரூ.1500 ஓய்வூதியம் கிடைக்கும். மேலும், 5 ஆண்டுகளுக்கு பிறகு இத்திட்டத்தில் தொடர விருப்பம் இல்லையெனில் கட்டிய பணத்தை வட்டியுடன் திரும்ப பெற்று கொள்ளும் வசதியும் உள்ளது. ஆயுள் காப்பீடு கழகம் இந்தத் திட்டத்தில் ஓய்வூதியம் வழங்கிட பொறுப்பாக செயல்படுகிறது. இத்திட்டத்தில் சேர வருமான வரி செலுத்துவர்கள், அரசு ஊழியர்கள் நீங்கலாக மற்ற சிறு, குறு விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, வாரிசுதாரரின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள இசேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.