பரமன்குறிச்சி அருகே பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்காததால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்து முன்னணி புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், முதல்வரின் தனிப் பிரிவு, மாவட்ட ஆட்சியர், மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை செல்லும் பாதையில் யுஎஸ்எஸ் 5 என்ற மின்மாற்றி பழுதடைந்து இரண்டு வாரத்துக்கும் மேல் ஆகிறது. இந்த மின்மாற்றியில் இருந்து விவசாயப் பணிகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட பம்புசெட் இணைப்புகள் செயல்படுகின்றன.
இப்பகுதியில் தென்னை, வாழை, முருங்கை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. மின்மாற்றி பழுதால் பம்புசெட்கள் இயக்க முடியாத சூழலில் பயிர்கள் வாட ஆரம்பித்துவிட்டன. எனவே, விவசாயத்தைக் காக்க அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மின்மாற்றியை சீரமைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.