தூத்துக்குடியில் படகு ஓட்டுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில்நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையினால் படகு ஓட்டுநர் சான்றிதழ் பயிற்சி மூன்று நாள்கள் நடத்தப்பட்டது. பயிற்சியின்போது கடலில் படகை கையாளுதல், வெளிப்பொருத்து என்ஜின் பராமரிப்பு முறைகள், கடல் பயணத்துக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய என்ஜின் பராமரிப்பு முறைகள் மற்றும் என்ஜின் இயக்கத்தின் போது ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தகுந்த உயிர் பாதுகாப்பு சாதனங்களுடன் அனுபவம் வாய்ந்த உதவியாளர்கள் மற்றும் இயந்திரப் பொறியாளர்களால் பயிற்சி நடத்தப்பட்டது. பயிற்சி முடித்தவர்களுக்கு மீன்வளக் கல்லூரி முதல்வர் ப. வேலாயுதம் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, பயிற்சிக்கான வசதிகளை படகில் சென்று அவர் நேரடியாக பார்வையிட்டார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை மீன்பிடி தொழில்நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை தலைவர் நீதிச்செல்வன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.