தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

29th Aug 2019 10:16 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்குவது மற்றும் சீர்மிகு நகரம் பணிகள் குறித்தும், பள்ளி கல்வித்துறை மூலம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் குறித்தும்,  தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் நிலை குறித்தும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும், குடிமராமத்து திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் நடைபெற்றும் வரும் தூர்வாரும் பணிகளின் நிலை குறித்தும் அலுவலர்களிடம் கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.
நேரடியாக ஆய்வு: தொடர்ந்து,  ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கட்டாலங்குளம் வாய்க்கால் குறிச்சிகுளம் ரூ.5 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளதை கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார். பின்னர், முடிவைத்தானேந்தல் பெருமாள்பிள்ளை குளத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு 20 சதவீத பணிகள் நடைபெற்று வருவதையும், முடிவைத்தானேந்தல் அய்யன்பிள்ளை ஊரணி புனரமைப்பு பணிகள் ரூ.1 லட்சம் மதிப்பில் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதையும் கண்காணிப்பு அலுவலர் நேரடியாகப் பார்வையிட்டு, பணிகளை விரைவாக முடிக்கவும், கரைகளில் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறையினரால் ரூ.33 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படும் சொக்கலிங்கபுரம் புதுக்குளத்தை பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர், அங்கு மடை பழுது பணிகள், கரையை பலப்படுத்தும் பணிகள், உபரி நீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, பொதுப்பணித் துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி செயற்பொறியாளர் மாரியப்பன், உதவிப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, ஹெலன் பொன்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT