கோவில்பட்டியில் பைக்கை எரித்து சேதப்படுத்திய வழக்கில் தொடர்புடைய இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டி நடராஜபுரம் 8ஆவது தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கட்டடத் தொழிலாளி கருப்பசாமி (27). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கொம்பையா மகன் மந்திரமூர்த்தி (22) மற்றும் சங்கரபாண்டியன் மகன் மந்திரமூர்த்தி(16) ஆகியோருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாம்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அதையடுத்து, வீட்டுக்குச் சென்ற கருப்பசாமி தனது பைக்கை வழக்கம்போல வீட்டின் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றாராம்.
அப்போது அங்கு வந்த இருவரும் கருப்பசாமியின் பைக்குக்கு தீ வைத்து சேதப்படுத்தினார்களாம். அதையடுத்து, கருப்பசாமி மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். இருப்பினும், பைக் தீயில் கருகி சேதமடைந்தது.
இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, பைக்கை எரித்ததாக இருவரையும் கைது செய்தனர்.