எட்டயபுரம் அருகேயுள்ள சுரைக்காய்பட்டி தோப்பூரணியில் "ஊருக்கு நூறு கை' திட்டத்தின் கீழ் நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் பி. சின்னப்பன் தலைமை வகித்தார். கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, எட்டயபுரம் வட்டாட்சியர் அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீரவரத்து கால்வாய் தூர்வாரும் பணியை, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து ஊருணி கரையோரம் மரக்கன்றுகளை நட்டினார்.
பின்னர் அவர் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில், "ஊருக்கு நூறு கை' எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ஊருணிகள், குளங்கள், குட்டைகள் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
நிலத்தடி நீர் சேமிப்பை கருத்தில் கொண்டு தூர்வாரும் பணிகளுக்கு அனுமதி உடனுக்குடன் வழங்கப்பட்டு மழை காலத்துக்கு முன்னதாக குளங்களை தூர்வாரி நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் வகையில் அதிகாரிகள் கண்காணிப்புடன் பணிகள் செம்மையாக நடைபெற்று வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம், ஒன்றிய பொறியாளர் செல்வ பாக்கியம், பேரூராட்சி இளநிலை பொறியாளர் முகைதீன் அபுபக்கர், அதிமுக ஒன்றியச்செயலர் பால்ராஜ், ஜெயலலிதா பேரவை செயலர் குட்லக் செல்வராஜ், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் தனஞ்செயன், கூட்டுறவு சங்கத் தலைவர் தனவதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.