தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர்-முக்காணி இடையில் தாமிரவருணி ஆறு வறண்டு கிடப்பதால், கடல்நீர் உள்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவ நதியான தாமிரவருணிஆறு, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே கடலில் கலக்கிறது.
கடந்த ஆண்டு போதுமான மழை பெய்யாததினாலும், கோடை மழை இந்தப் பகுதியில் பெய்யாததினாலும் ஆறு, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. நீர் நிலைகளிலும் நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது.
இந்நிலையில் இந்தாண்டு ஆத்தூர் மற்றும் முக்காணிக்கு இடையில் பாயும் தாமிரவருணி ஆறு, வரலாறு காணாத நிலையில் வறண்டு கிடக்கிறது. இப்பகுதியில் கடல் நீர் உள்புகுந்துள்ளதால் நிலத்தடி நீர் உப்பாக மாறிவிடுமென பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இப்பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை சரிவர கட்டப்படாததால் தான் கடல் நீர் உள்புகுந்துள்ளது எனவும், தடுப்பணையை சீரமைக்க வேண்டுமெனவும் இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டிய நிலையிலும் ஆத்தூர் -முக்காணி இடையில் ஆறு வறண்டு கிடப்பது மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.