திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி விலக்கில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி, விளாத்திகுளம், அருப்புக்கோட்டையிலிருந்து திருநெல்வேலி சென்றுவரும் அரசுப் பேருந்துகள் வில்லிசேரி விலக்கில் நிற்கும் என, அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விலக்கில் பேருந்துகள் நிற்பதில்லை. ஒரு சில பேருந்துகள் மட்டும் நின்று செல்லுகின்றன. ஆனால், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் அனுமதிக்கப்பட்ட பேருந்துகள் வில்லிசேரி விலக்கில் நின்று செல்லவும், அதிகக் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (சக்தி) பிரேம்குமார் தலைமையில், கிராம மக்கள் பிரதிநிதிகளான ஜெயகுமார், மணி, ஈஸ்வரன், காசிராஜன், வெங்கடேசன் ஆகியோர் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயாவிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.
வில்லிசேரி கிராம மக்கள் கூறியது: இக்கோரிக்கை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி விலக்கு அருகே வரும் செப். 3 இல் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
அரசுப் போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளர் பொன்ராஜ் கூறியது: கோவில்பட்டி, விளாத்திகுளம், அருப்புக்கோட்டை பகுதியில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்துகள் வில்லிசேரி விலக்கில் நின்று செல்கிறதா என்பது குறித்து கண்காணிக்கப்படும் என்றார் அவர்.