விவசாயிகளின் பயிர் கடன்கள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் எட்டயபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்க எட்டயபுரம் வட்டச் செயலர் வி. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் பி. முத்துராஜ், ஜெ. அப்பணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எட்டயபுரம், இளம்புவனம், குளத்துவாய்பட்டி, கே. புதூர், சுரைக்காய்பட்டி, ஈராச்சி, செமப்புதூர், அஞ்சுரான்பட்டி, வாலம்பட்டி, கீழஈரால், மேலஈரால், நற்கலைக்கோட்டை ஆகிய பகுதிகளில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்தில், விவசாயக் கடன்கள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். 2016 இல் இருந்து நிலுவையிலுள்ள பயிர்காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையை விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வரவு வைக்காமல், விவசாயிகளுக்கே வழங்க வேண்டும். 60 வயது நிறைவடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உரையாற்றினர்.
கூட்டத்தில் மாவட்டச் செயலர் எஸ். நல்லையா, நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், ஜெயராமன், குருசாமி, அழகர்சாமி, ரவீந்திரன், கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.