கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து உயிரிழந்த மு.தேவேந்திரகுமார் (44) குடும்பத்திற்கு திங்கள்கிழமை நிதியுதவி அளிக்கப்பட்டது.
1999 பேட்ஜில் பணியில் சேர்ந்த தேவேந்திரகுமார், நோயினால் பாதிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில், அந்த பேட்ஜில் அவருடன் பணியில் சேர்ந்த காவலர்கள், உதவும் உறவுகள் குரூப் என்று கட்செவி அஞ்சல் குரூப் மூலம் நிதியுதவி பெற்றனர். அதில் சுமார் 800 பேர் அளித்த ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் நிதியுதவியை, திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு தலைமைக் காவலர் தாமோதரன், திருநெல்வேலி பெருமாள்புரம் காவல் நிலைய காவலர் ராஜ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர், கோவில்பட்டி முத்துநகரில் உள்ள தேவேந்திரகுமார் வீட்டிற்கு திங்கள்கிழமை சென்று அவரது மனைவி ஷர்மிளாவிடம் அளித்தனர்.