தூத்துக்குடி

வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் தேரோட்டம்

18th Aug 2019 01:09 AM

ADVERTISEMENT


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற இவ்விழாவில் நாள்தோறும் அம்மன் பூஞ்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 10ஆம் திருநாளான சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளி, நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை, இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், மணியம் தமிழரசு, பிச்சையா, சிவா, குமார், முத்துபிரபு, தக்கார் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்ரமணிய ஆதித்தன் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு அம்மன் அலங்காரச் சப்பரத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளி, சண்முகருக்கு எதிர்சேவை காட்சியளித்து வீதியுலா வந்து கோயில் சேர்ந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில்... அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா ஆக. 20ஆம் தேதி அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, திங்கள்கிழமை (ஆக.19) மாலை 4.30 மணிக்கு கொடிப்பட்ட வீதியுலா நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோயில் செப்புக்கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் சி.குமரதுரை மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT