தூத்துக்குடி

நகை பறிப்பு: இருவர் கைது

18th Aug 2019 01:27 AM

ADVERTISEMENT


கோவில்பட்டி அருகே தம்பதியை தாக்கி நகை, பணம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
கோவில்பட்டி பாரதி நகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த நல்லமுத்து மகன்  முருகேசன் (48). அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநர். இவர், மனைவி செல்லம்மாளுடன் கயத்தாறையடுத்த புதுக்கோட்டைக்குச் சென்றுவிட்டு, பைக்கில் கடந்த ஜூன் 19ஆம் தேதி இரவு வீடு திரும்பினாராம். நாலாட்டின்புத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, மற்றொரு பைக்கில் வந்த 3 பேர் முருகேசன் மற்றும் அவரது மனைவியை தாக்கி, செல்லம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை,  ரூ.6 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு  தப்பிவிட்டனராம். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர். 
இந்நிலையில்,  நாலாட்டின்புத்தூர் காவல் உதவி ஆய்வாளர் திலீபன் தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, கட்டாலங்குளம் விலக்கு பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை அம்பல வாசகத் தெருவைச் சேர்ந்த சங்கரன் மகன் பேச்சிமுத்து(24), நரசிங்கநல்லூர் வள்ளுவர் நகரைச் சேர்ந்த கருப்பன் மகன் வேல்முருகன் (41) என்பதும்,  இருவரும் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் முருகேசன் மற்றும் அவரது மனைவியை தாக்கி நகையைப் பறித்துச் சென்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.  இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT