தூத்துக்குடி அருகே சனிக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை செட்டிமல்லன்பட்டியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (37). கட்டடத் தொழிலாளி. இவருக்கு இசக்கியம்மாள் (27) என்ற மனைவியும், முத்து நந்தினி (8), முத்து பாலஇலக்கியா (6) என்ற 2 மகள்களும், முத்து நவநீதன் என்ற மகனும் உள்ளனர்.
பேச்சிமுத்து வீட்டில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுக்காக வீட்டின் தோட்டப் பகுதியில் உள்ள இரும்பு வேலி வழியாக மின்சார வயர் கொண்டு செல்லப்பட்டிருந்ததாம். மின்மோட்டார் இயக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை லேசான மழை பெய்ததால் இரும்பு வேலியில் மின்சார கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி முத்து பாலஇலக்கியா இரும்பு வேலியை பிடித்ததால், அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.