தூத்துக்குடி

ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: மக்கள் நலனுக்கான முடிவா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்: டி.ராஜா

16th Aug 2019 09:50 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை மக்கள் நலனுக்கான முடிவுதானா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் டி.ராஜா.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கான 370-ஆவது சட்டப் பிரிவை நீக்கியது ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதலாகும்; அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்திய கூட்டாட்சித் தத்துவத்தின்படி அந்த மாநில மக்களின் கருத்துகளையும், அந்த மாநிலத்தில் அரசியல் கட்சிகளின் கருத்துகளையும் கேட்காமல் எடுக்கப்பட்டிருக்கும் முடிவு சரியானது அல்ல.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அமைதி வந்துவிட்டது என யாரும் கருத முடியாது. மத்திய அரசின் நடவடிக்கை மக்கள் நலனுக்கானதுதானா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நாட்டில் நலிந்து போய் கொண்டிருக்கும் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்றவற்றில் இருந்து மக்களை திசைதிருப்பும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மீது மக்களுடைய கவனத்தை மத்திய அரசு கொண்டு சென்று உள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என மத்திய அரசு வார்த்தை ஜாலம் காட்டிவருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுக அரசு தமிழர்களின் உரிமையைக் கைவிட்டுள்ளது; தமிழர்களின் நலனைக் காப்பாற்ற முடியாத அரசாக செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.
முன்னதாக, தூத்துக்குடியில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்,  கூட்ட அரங்கத்தின் நுழைவாயிலில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து, கூட்ட அரங்கத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியை அக்கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநிலச் செயலர் முத்தரசன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT