தூத்துக்குடி

கடந்த ஆண்டு தீர்மானம் என்னவாயிற்று? கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்து நூதனப் போராட்டம் நடத்திய மக்கள்

16th Aug 2019 09:42 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி, ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில் கடந்த முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் தீர்மானங்களை நிறைவேற்றாததைக் கண்டித்து கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர்.
கோவில்பட்டி ஒன்றியம், மூப்பன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அக்கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மூர்த்தி தலைமையிலான பொதுமக்கள், கடந்த முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தெருவிளக்கு, வாருகால் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும், ஆடு, மாடு, கோழி வளர்ப்போருக்கு கொட்டகை அமைத்துத் தரவேண்டும், கிராமத்துக்கு வரும் பிரதான சாலையில் உள்ள மதுபானக் கடையை அகற்ற வேண்டும், கிராமத்தில் இ-சேவை மையத்துக்காக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தக் கோரிக்கைள் தற்போதுவரை நிறைவேற்றப்படாததையடுத்து நிகழாண்டு கிராம சபை கூட்டத்தைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தனர்.
பின்னர், புதிதாகக் கட்டப்பட்டுள்ள இ-சேவை மையக் கட்டடத்தை திறக்க வலியுறுத்தி அக்கட்டடத்துக்கு மாலை அணிவித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கால்நடைகளுக்கான கொட்டகை அமைத்துத் தர வலியுறுத்தி மாடுகள் மீது கோரிக்கை மனுவை மாலையாக அணிவித்து ஊர்வலமாக கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தனர். 
தகவல் தெரிந்தவுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)  மாணிக்கவாசகம் சென்று, மீண்டும் கிராம சபை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். கோரிக்கைகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதையடுத்து, கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில்... ஆழ்வார்திருநகரி ஒன்றியத்துக்குள்பட்ட ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி சார்பில் செங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் வியாழக்கிழமை  நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் பற்றாளர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி செயலர் மனுவேல் மற்றும் கிராம மக்கள் 50-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்களை வாசிக்கும்போது 3 ஆண்டுகளுக்கு முன்புள்ள தீர்மானங்களே இன்னும் நிறைவேற்றப்படவில்லையெனவும், ஊராட்சி செயலர் எந்த ஒரு திட்டத்தையும் மக்களுக்கு தெரியபடுத்துவதில்லையெனவும் புகார் தெரிவித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி பொதுமக்கள் முகத்தில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஆணையர் அரவிந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சு நடத்தினர். அதில் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை அடுத்து நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்துக்குள் நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து, பள்ளியில் ஆணையர் அரவிந்தன் தலைமையில் சிறப்பு கிராம சபை  கூட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை  கிழக்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலர் வழக்குரைஞர் எல்.டி.தாஸ் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT