தூத்துக்குடி

ஆற்று மணல் திருட்டைத் தடுக்கக் கோரி கிராமங்களில் கருப்புக் கொடி

16th Aug 2019 09:41 AM

ADVERTISEMENT

எட்டயபுரம் வட்டம், கீழ்நாட்டுக்குறிச்சி பகுதியில் ஆற்று மணல் திருட்டைத் தடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் வியாழக்கிழமை 35 கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது .
கீழ்நாட்டுக்குறிச்சியில் வைப்பாற்றுப் படுகையோரம் ஆற்று மணல் திருட்டு நடப்பதைத் தடுக்கக் கோரி,  அக்கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் பூல்பாண்டி, விளாத்திகுளம் ஒன்றியச் செயலர் ரமேஷ்குமார், அக்கட்சியினர் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை கடந்த 13ஆம் தேதி முற்றுகையிட்டு, வட்டாட்சியர் அழகரிடம் மனு அளித்தனர். 
அதில், கீழ்நாட்டுக்குறிச்சியில் வைப்பாற்றின் அருகே, சவுடு மண், சரளை மண் அள்ளுவதற்கு சிலர் வருவாய், கனிமவளத் துறைகளிடம் அனுமதி பெற்றுவிட்டு, அதற்குப் பதிலாக ஆற்று மணலை இயந்திரங்கள் மூலம் முறைகேடாக அள்ளி நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி விற்று வருகின்றனர். கடந்த 8ஆம் தேதி முதல் இரவு பகலாக ஆற்று மணல் திருடப்படுகிறது. 20 மீட்டர் ஆழத்துக்கும் அதிகமாக மணல் அள்ளப்படுவதால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, சவுடு மண்,  சரளை மண் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இயற்கை வளம் சுரண்டப்படுவதைத் தடுக்க வேண்டும். மணல் திருட்டு தொடர்பாக பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால், எட்டயபுரம் வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களில் சுதந்திர தினமான வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளோம் எனத் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, வியாழக்கிழமை எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகம், எட்டயபுரம் நகர வீதிகள், நடுவப்பட்டி, ரணசூர் நாயக்கர்பட்டி, அஞ்சுரான்பட்டி, செமப்புதூர், சண்முகபுரம், புதுப்பட்டி, தலைக்காட்டுபுரம், ராமனூத்து, படர்ந்தபுளி, சிந்தலக்கரை, துரைச்சாமிபுரம், மீனாட்சிபுரம், கீழஈரால், வாலம்பட்டி, ஈராச்சி, தாப்பாத்தி, முத்துலாபுரம், கோட்டூர், கீழ்நாட்டுக்குறிச்சி, சக்கிலிபட்டி, அயன்வடமலாபுரம், பேரிலோவன்பட்டி, நம்பிபுரம், முதலிபட்டி, ஆற்றங்கரை, அம்மன் கோவில்பட்டி  உள்பட 35-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகள், பேருந்து நிறுத்தங்கள், கிராம சந்திப்புகள், ஊராட்சி அலுவலக, இ-சேவை மையக் கட்டடங்கள், நான்குவழிச் சாலை என பல்வேறு பகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது.
விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீஸார் சென்று அக்கொடிகளை அகற்றியதுடன்,  பாதுகாப்பு, ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT