தூத்துக்குடி

பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்: கனிமொழி

11th Aug 2019 01:07 AM

ADVERTISEMENT


பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி  வலியுறுத்தினார்.
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் சமூக மேம்பாட்டு திட்டம் சார்பில் ஆண்டுதோறும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அங்கு மகளிர் மற்றும் மாணவர்களுக்கான மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு தருவைகுளம் கிராமத்தில் உள்ள பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான சூழல் மேம்பாட்டு முகாம், தருவைகுளம் புனித கத்தரீன் பெண்கள் தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடந்தது. கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ் தலைமை வகித்தார். தூய மரியன்னை கல்லூரியின் குழந்தை தெரஸ் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கனிமொழி பேசியது:
பல ஆண்டுகளுக்கு முன்பு பெண் கல்வி என்பது நினைக்க முடியாத ஒன்றாக இருந்தது. இந்த சமூகச் சூழலை மாற்றி இப்போது நாம் அனைவரும் கல்வி பயிலும் நிலை உள்ளது. பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்று போராடி பெற்றுத் தந்தவர்கள் பெரியாரும் திராவிட இயக்கத்தினருமே. சில நாள்களுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்- 2 தலைமைப் பணியில் இருந்தவர்களில் 2 பேர் பெண்கள். எனவே பெண்கள் தங்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து, அங்கு மகளிர் மற்றும் மாணவர்களுக்காக நடத்தப்படும் பயிற்சிகளான சணல் கைவினைப் பொருள்கள் தயாரித்தல், தையல் பயிற்சி, ஆங்கில மொழி பயிற்சி, மாடி தோட்டம் அமைத்தல் உள்ளிட்டவற்றை அவர் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் பேரவை உறுப்பினர் எம்.சி. சண்முகையா, மாநில தி.மு.க. மாணவர் அணி துணைச் செயலாளர் எஸ்.உமரிசங்கர், முன்னாள் ஊராட்சித் தலைவர் மகாராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT