தூத்துக்குடி

ஆடியோ பிளேயர் பழுது: தனியார் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

11th Aug 2019 01:04 AM

ADVERTISEMENT


வாடிக்கையாளரின் ஆடியோ பிளேயரை சரிசெய்ய மறுத்ததற்காக இழப்பீடு வழங்க திருநெல்வேலி தனியார் நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
காயல்பட்டினம் நயினார் தெருவைச் சேர்ந்தவர் ஹனீபா (48).  ஆறுமுகனேரியில் காலணி கடை நடத்திவரும் இவர், கிராம நுகர்வோர் பாதுகாப்புக் குழுத் தலைவராகவும் உள்ளார்.
இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில், தனது காருக்கு ஆடியோ மியூசிக் பிளேயர் ரூ. 5ஆயிரத்துக்கு வாங்கினாராம். 
ஆனால், சில மாதங்களிலேயே பழுதான அதை, சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்தில் கொடுத்து பழுது நீக்கித் தருமாறு கூறினாராம். அதற்கு நிறுவனத்தினர் பல்வேறு காரணங்களைக் கூறி பழுது நீக்க மறுத்தனராம். இதையடுத்து ஹனீபா, திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் முறையிட்டார். அதில், மன உளைச்சலுக்கு ரூ.1லட்சம், பிளேயருக்கு ரூ. 5 ஆயிரம் தரவேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 
நுகர்வோர் நீதிமன்றம் விசாரித்து, ஹனிபாவின் மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம்,  ஆடியோ மியூசிக் பிளேயருக்கு ரூ. 5 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் என ரூ . 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த கார் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. மேலும் அபராதத் தொகையை ஒரு மாதத்துக்குள் வழங்காவிட்டால் 6 சதவீத வட்டியுடன் தொகையை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT