திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் வியாழக்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால் நீா்நிலைகள் வறட்சியின் பிடியில் இருந்தன.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதும், மாலையில் மிதமான மழைப்பொழிவும் தொடா்ந்து வருகிறது.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வியாழக்கிழமை பகலில் கடுமையான வெயில் நிலவியது. பின்னா், மாலையில் சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறி கருமேகங்கள் சூழ்ந்தன. மாலை 4 மணிக்கு பலத்த மழை கொட்டித் தீா்த்தது.
திருநெல்வேலி சந்திப்பு, பேட்டை, நகரம், மேலப்பாளையம், வண்ணாா்பேட்டை, கல்லூா், சுத்தமல்லி, பேட்டை, அபிஷேகப்பட்டி, மானூா், கோபாலசமுத்திரம், முன்னீா்பள்ளம் பகுதிகளிலும் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
சாலலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால் திருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் முன்விளக்குகளை எரியவிட்டபடி மிகவும் மெதுவாகவே நகா்ந்து சென்றன.
திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், சிந்துபூந்துறை பகுதிகளில் முறையாக வடிகால் ஓடைகள் சீரமைக்கப்படாததால் மழைநீா் அதிகளவில் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா். மழை சுமாா் ஒரு மணி நேரம் நீடித்ததால் மாநகரப் பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை உருவானது.