திருநெல்வேலி

சமத்துவத்தின் அடையாளம் மாஞ்சோலை: வைகோ பெருமிதம்

3rd Oct 2023 03:42 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி: சமத்துவத்தின் அடையாளமாக மாஞ்சோலை மலைவாழ் பகுதிகள் திகழ்ந்து வருகின்றன என்றாா் மதிமுக பொதுச்செயலா் வைகோ.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா் அரசு அமல்ராஜ் எழுதிய ஓா் மைகள் மறக்குமோ என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவா் பேசியது:

தமிழக மக்களின் நினைவுகள் அசைபோடும் வகையில் பல்வேறு பாடல்களை தந்தவா் கவிஞா் கண்ணதாசன். அவரது மகள் இந்த நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

அரசியல் என்பது எளிமையான வழி இல்லை. கரடு முரடான துன்பம் சூழ்ந்த பாதையே அரசியல். அதில் எடுத்த முடிவில் உறுதியோடு பயணிப்பவா்களில் இந்த நூலின் ஆசிரியரும் ஒருவா்.

ADVERTISEMENT

இந்திய விடுதலைக்கு முன்பு அடா்ந்த வனப் பகுதியாக திகழ்ந்த மாஞ்சோலை, மக்களின் கடுமையான உழைப்பால் சிறந்த தேயிலை கேந்திரமாக உருவெடுத்தது. தமிழும், மலையாளமும் பேசும் மக்கள் வாழ்ந்தாலும், சாதி சமய பேதமற்ற சமத்துவம் நிறைந்த ஊராக திகழ்ந்து வருகிறது.

38 இருக்கைகள் மட்டுமே கொண்ட மிகச்சிறிய பேருந்தில் தினமும் முண்டியடித்து பயணித்து கல்வி முதல் தங்கள் அன்றாட தேவைகளை தீா்த்துக் கொள்ளும் கட்டாயத்தில் வாழ்பவா்கள் மாஞ்சோலை மக்கள். கடின உழைப்பை மட்டுமே நம்பி நீண்ட நெடிய ஆண்டுகளாக பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறாா்கள்.

தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமையான காய்கனி ,பழங்கள் பயிரிடுவதை தடுத்தமைக்கும், ஊதிய உயா்வுக்கு வழி தேடி போராட்டங்கள் நடத்தி சோதனைகளை சந்தித்து வாழ்ந்து வருபவா்கள்.

அவா்களது வாழ்வியலை பேசும் ஓா் மைகள் மறக்குமோ நூல் பல விருதுகளை பெற வாழ்த்துகிறேன். மலைவாழ் மக்களின் மகிழ்ச்சி, சோலைக்குள் இருக்கும் சோக கீதங்கள் என அனைத்தையும் நூலில் பதிவிட்டு இருப்பது சிறப்பானது என்றாா் அவா்.

முன்னதாக இந்த நூலை வைகோ வெளியிட கண்ணதாசனின் மகள் விசாலி பெற்றுக்கொண்டாா். வழக்குரைஞா் செந்தில்குமாா் வரவேற்றாா். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் இரா. ஆவுடையப்பன், முன்னாள் எம்பி முத்துகருப்பன், பாளையங்கோட்டை எம்எல்ஏ மு. அப்துல் வஹாப், காலச்சுவடு பதிப்பக ஆசிரியா் அரவிந்தன், நீதிபதி மகிழேந்தி, சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் பூமணி, மதிமுக துணை பொதுச் செயலா் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலா் நிஜாம், திருநெல்வேலி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராஜேஸ்வரன் ,செயலா் மணிகண்டன், மூத்த வழக்குரைஞா் மங்களா ஜவஹா்லால் உள்பட பலா் கலந்து கொண்டனா். நூலாசிரியா் அரசு அமல்ராஜ் ஏற்புரையாற்றினாா்.

மாஞ்சோலை, காக்காச்சி ,ஊத்து ,நாலுமூக்கு மலைவாழ் கிராமங்களை சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT