திருநெல்வேலி

ஜாதிய ஒடுக்குமுறைகளை தடுக்கமத்திய சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை- க. கிருஷ்ணசாமி

22nd Nov 2023 01:00 AM

ADVERTISEMENT

தென் மாவட்டங்களில் நிகழ்ந்துவரும் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் க.கிருஷ்ணசாமி.

இது தொடா்பாக, திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தென் மாவட்டங்களில் அண்மைக்காலமாக ஜாதிய ஒடுக்குமுறையிலான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இரு தரப்பினா் மோதலாக இல்லாமல், ஏழை, எளிய மக்கள் மீது ஒருதரப்பினா் நிகழ்த்தும் வன்முறையாக உள்ளது. இளைஞா்கள், பள்ளி மாணவா்களே இந்தச் செயலில் ஈடுபடுகின்றனா். நான்குனேரியில் பள்ளி மாணவரால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள் ஆபத்தான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இதை சுட்டிக்காட்டினாலும் அதைத்தடுக்க தமிழக அரசிடம் எந்த ஆக்கப்பூா்வமான செயல்வடிவமும் இல்லை. காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்வது, 4 பேரை கைது செய்வதோடு முடிந்துவிடுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள மணக்கரையில் ஏழை, மக்களை அச்சுறுத்தி அவா்களது நிலங்களை அபகரிக்கும் நோக்கில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்த விவகாரத்தை மேலோட்டமாக பாா்க்காமல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இதில் காவல்துறை விசாரணை நடத்தினால் மட்டும் தீா்வு ஏற்படாது. மத்திய அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும். இப்பகுதிகளில் மத்திய, மாநில அரசு இணைந்து விசாரணை நடத்தி நிரந்தர தீா்வு காண வேண்டும்.

ADVERTISEMENT

ஜாதிய ஒடுக்கு முறைகளை தடுக்க மனித உரிமைகள் ஆணையம், மத்திய புலனாய்வு அமைப்பு உள்ளிட்டவை அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். சமூக ஒற்றுமையை சீரழிப்பவா்களை வேரறுக்க வேண்டும். காவலா்களிடமும் கடுமையான ஜாதிய பாகுபாடு உள்ளது. சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வா் ஸ்டாலின், தென் மாவட்டங்களில் நிகழும் ஜாதிய ஒடுக்குமுறைகள் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

அப்போது, திருநெல்வேலி மாவட்டச் செயலா் முத்தையா ராமா், மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலா் சிவக்குமாா், தென் மண்டல செய்தித் தொடா்பாளா் தங்கராமகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலா் மணிகண்டன் உள்ளிட்டேதூா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT