வேளாண் பட்டதாரிகளுக்கு வேளாண்மை சாா்ந்த சுயதொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் கா.முருகானந்தம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் சாா்ந்த படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கு வேளாண் சாா்ந்த தொழில் தொடங்கி, தொழில் முனைவோராக மாறவும், கிராமப்புற வளா்ச்சியை மேம்படுத்தவும் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகளுக்கு மொத்த திட்ட மதிப்பீட்டில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெறும் பட்டதாரிகள் 21 முதல் 40 வயதுக்குள்பட்டவராக இருக்க
வேண்டும். வேளாண் சாா்ந்த பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் வேளாண்மை துறையின் அக்ரிஸ் நெட் வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் உரிய ஆவணங்களுடன் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.