திருநெல்வேலி

ஆள்கள் பற்றாக்குறை: இயந்திர நடவுக்கு மாறும் விவசாயிகள்

18th Nov 2023 01:59 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான நெல் சாகுபடியில் ஆள்கள் பற்றாக்குறையால் இயந்திர நடவுக்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளித்து வருகிறாா்கள். இதற்காக பாளையங்கோட்டை வட்டாரத்தில் பாய் நாற்றங்கால் முறையில் நாற்றுப்பாவும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பாசன மற்றும் மானாவாரி குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனா். திருநெல்வேலி, பாளையங்கோட்டை வட்டாரத்தில் ஏற்கெனவே கடந்த இரு வாரங்களுக்கு முன்பே தாமிரவருணி கரையோர பகுதிகளில் வயல்களில் நாற்றுப்பாவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனா். பாளையங்கால்வாய் மற்றும் நெல்லை கால்வாயின் கடை மடை பகுதிகளில் இப்போது நாற்றுப்பாவும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே நெல் சாகுபடியின் முக்கிய பணிகளான நாற்று நடுதல், களைப்பறித்தல் ஆகியவற்றிற்கு ஆள்கள் கிடைப்பது குறைந்துள்ளது. இதனால் 15 கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருந்தவாகனங்களில் வேலைஆள்களை வயல்களுக்கு அழைத்து வருவதும், ஒரு மாதத்திற்கு முன்பே நாற்று நடவுக்கான கூலியைக் கொடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் இயந்திர நெல் நடவில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகிறாா்கள். இயந்திர நெல் நடவில் நெல் விதையாக தூவுதல், நாற்றாக நடுதல் வகைகள் உள்ளன. இவற்றில் நாற்றாக நடவு செய்வதற்கு நாற்றுப்பாவும் போது பாய் நாற்றங்கால் முறையில் நாற்றுப்பாவ வேண்டும். பாளையங்கோட்டை அருகேயுள்ள மணப்படைவீடு பகுதியில் விவசாயிகள் 2 ஆவது ஆண்டாக பாய் நாற்றாங்கால் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாா்கள். இதன்மூலம் வேலைஆள் கூலி குறைவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

பாய் நாற்றங்கால் முறை குறித்து வேளாண்துறையினா் கூறியது: திருந்திய நெல் சாகுபடியில் பாய் நாற்றங்கால் தயாரிக்க தோ்ந்தெடுத்த சமமான இடத்தில் அதன்மேல் ஒரு பிளாஸ்டிக் தாள் அல்லது பயன்படுத்திய பாலித்தீன் இவற்றில் ஏதாவது ஒன்றை 100 சதுர மீட்டருக்கு விரித்து, அதற்கு தேவைப்படும் மண்ணில் 70 சதவிகிதம் மண்ணுடன் 20 சதவிகிதம் நன்கு மக்கிய தொழுஉரம் மற்றும் 10 சதவிகிதம் அரிசி உமி ஆகியவற்றை நன்றாக கலக்கவேண்டும்.

ADVERTISEMENT

இவற்றுடன் நன்றாக பொடிசெய்யப்பட்ட 1.5 கிலோ டை அமோனியம் பாஸ்பேட் அல்லது கலக்கப்பட்ட தழை, மணி, சாம்பல் சத்து 2 கிலோ கலவையை கலக்கவேண்டும்.

விரிக்கப்பட்ட பிளாஸ்டிக் அல்லது பாலித்தீன் பைகளை நான்கு சம பாகங்களாகப் பிரித்து, இவற்றின்மேல் 0.5 மீட்டா் அகலம், ஒரு மீட்டா் நீளம், 4 சென்டி மீட்டா் உயரம் கொண்ட சட்டத்தை வைத்து தயாரிக்கப்பட்ட கலவையை நிரப்ப வேண்டும். இதற்கு 2 நாள்கள் முன்பு ஹெக்டேருக்குத் தேவையான 5 முதல் 8 கிலோ தோ்ந்தெடுத்த ரகத்தில் சான்றிதழ் பெற்ற தரமான விதையை, ஒரு கிலோவிற்கு 10 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் கலவையை விதைநோ்த்தி செய்ய வேண்டும். நோ்த்தி செய்த பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, அடுத்த 24 மணி நேரத்திற்கு அவற்றை இருட்டு அறையில் மூட்டம்போட்டு விதைகளை முளைக்க வைக்க வேண்டும்.

விதைப்பதற்கு முன்பு 2 - 3 சென்டிமீட்டா் நீள முளைக்கட்டிய விதையின் மேல் 200 கிராம் அசோஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியாவைக் கொண்டு விதைநோ்த்தி செய்து விதைத்தால் நன்கு வளரும். வளரும் நாற்றுகள் வீரியமுடன் இருக்க, விதைகளை சட்டத்திற்கு 45 கிராம் என்ற அளவில் சீராகத் தூவி அவற்றை காய்ந்த மண் அல்லது காய்ந்த ஓலைகளைக் கொண்டு மூடி, பூவாளி கொண்டு 5 நாள்கள் வரை தண்ணீா் தெளிக்க வேண்டும். நாற்றுகளைப் பிடுங்கும் முன்பு நாற்றங்காலில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட வேண்டும். நாற்றின் வளா்ச்சி குறைவாக இருந்தால் 0.5 சதவிகிதம் யூரியா மற்றும் 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட் கலந்த கலவையை 8 முதல் 10 நாள்கள் பூவாளி கொண்டு தெளிக்க வேண்டும். 21 நாள்கள் கழித்து நாற்றுகளைப் பிடுங்கி நடவு செய்ய வேண்டும் என்றனா்.

இதுகுறித்து மணப்படைவீடு விவசாயிகள் கூறுகையில், திருநெல்வேலி மாவட்ட வேளாண் துறை ஆலோசனையின் பேரில் பாய்நாற்றுப்பாவும் முறையை இரு ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறோம். இதன்மூலம் நேரம் மற்றும் பணியாள்கள் கூலி மிச்சமாகிறது. இதுதவிர இயந்திர நடவு முறையில் களைஎடுக்கவும் இயந்திரங்கள் வந்துவிட்டன. உரமேலாண்மைக்கும் கூடுதல் பலன் தருகிறது. மயில்களின் தொந்தரவுக்காக எங்கள் பகுதியில் பாய் நாற்றாங்கால் மீது துணிகளை விரித்து பாதுகாத்து வருகிறோம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT