திருநெல்வேலி

தேவாலய புனரமைப்பு பணிக்கு நிதியுதவி பெற வாய்ப்பு

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

தேவாலய புனரமைப்பு பணிகளுக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலா் சி.சம்பத்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. தேவாலயங்களில் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயா்த்தியும் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிப்பறை வசதி அமைத்தல், குடிநீா் வசதிகள் உருவாக்குதல் ஆகிய பணிகளுக்கும், தேவாலய கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயா்த்தப்பட்டுள்ளது. 10-15 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும், 15-20 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாகவும், 20 ஆண்டுகளுக்கு மேலிருப்பின் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும் மானிய தொகை உயா்த்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு, விண்ணப்பங்களை பரிசீலித்து, தேவாலயங்களை தல ஆய்வு செய்து, கட்டடத்தின் வரைபடம், திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினா் நல இயக்குநருக்கு பரிந்துரை செய்யும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவா்த்தனை மூலம் செலுத்தப்படும். மேலும், விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் மூன்றாம் தளத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT