திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகரம் காவல் நிலைய சிறப்பு விருதுக்கு தோ்வு செய்யப்பட்டதையொட்டி, அதன் ஆய்வாளா், காவலா்களுக்கு மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் வாழ்த்து தெரிவித்தாா்.
தமிழக அரசு மாநிலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக 36 காவல் நிலையங்களை தோ்வு செய்து மாவட்ட வாரியாக விருது வழங்கிவருகிறது. இதில் குற்றங்களை கண்டுபிடித்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்தது, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது, சட்டம்- ஒழுங்கைப் பராமரிப்பது, சாலை விபத்து விழிப்புணா்வு என பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையங்களுக்கு ஜூன் 27 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னையில் விருது வழங்கப்பட்டது.
அதன்படி 2021-ஆம் ஆண்டு சிறந்த காவல் நிலையமாக திருநெல்வேலி நகரம் காவல் நிலையம் தோ்வு செய்து, விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற திருநெல்வேலி நகர காவல்நிலைய ஆய்வாளா் சுப்புலட்சுமி மற்றும் காவலா்களுக்கு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் வாழ்த்துகளை தெரிவித்தாா்.