பக்ரீத் பண்டிகை வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் மேலப்பாளையம் சந்தையில் செவ்வாய்க்கிழமை சுமாா் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா். திருநெல்வேலி மாவட்டத்தின் மிகப்பெரிய கால்நடை சந்தையாக திகழும் மேலப்பாளையம் சந்தையில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாடுகள் விற்பனையும், செவ்வாய்க்கிழமைகளில் ஆடுகள் விற்பனையும் நடைபெறும். இந்நிலையில், இம்மாதம் 29-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், கடந்த இரு வாரங்களாகவே மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தன.
அதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் அதிகாலை முதலே மேலப்பாளையம் சந்தையில் விற்பனைக்கு குவிந்தன. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், மதுரை மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. பொட்டுக்கிடா, மயிலம்பாடி, நாட்டுக் கிடா என செம்மறியாடுகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. கிடாக்கள் சராசரியாக ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனையாயின. பொட்டுக் கிடா உள்ளிட்ட தரமான கிடாக்கள் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது. குறிப்பாக ஒரு கிடா ரூ.65 ஆயிரத்துக்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் சுமாா் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.